சௌ சௌ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சௌ சௌ கொடிவகை தாவரங்களில் ஒன்று.

பெங்களூர் கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் செளசெளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்கள் மூலமாக இந்தியாவில் அறிமுகம் ஆனது.

செள செள அதிக வெப்பநிலை நிலவக்கூடிய கடலோரப்பகுதியிலும், குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் பயிரிடப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 1500 மீட்டர் உயரம் வரை நன்கு வளரக்கூடியது.

செள செள பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது.

கொடி வகையைச் சேர்ந்த செடியான இது, மெல்லிய குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது என்பதால் பெங்களூர், மைசூர் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

பச்சைக் காய் வகை மற்றும் வெள்ளைக் காய் வகை என இரு இரகங்கள் உள்ளன.

பருவம்

மலைப்பிரதேச பகுதிகளுக்கு ஏப்ரல் – மே மாதமும், சமவெளிப்பகுதிகளுக்கு ஜீலை – ஆகஸ்ட் மாதமும் ஏற்ற பருவங்கள் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய, ஈரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் குணம் நிறைந்த களிமண், செம்மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.5 இருந்தால் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். செளசெள அதிக வெப்பநிலை நிலவக்கூடிய கடலோரப்பகுதியிலும், குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 முதல் 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பின்பு 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை 2.5 x 1.8 மீட்டர் என்ற இடைவெளியில் எடுக்கவேண்டும். 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 250 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மேல் மண்ணுடன் நன்கு கலந்து இட்டு குழிகளை மூடவேண்டும்.

விதை

செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. குருத்து 13 செ.மீ முதல் 15 செ.மீ வரை வளர்ந்தவுடன் நடவு செய்ய உபயோகப்படுத்தலாம். இதைத் தவிர தண்டின் வெட்டுத் துண்டுகளையும் நடவிற்குப் பயன்படுத்தலாம்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் நன்கு முற்றி முளையிட்ட காய்களை குழிக்கு 2 முதல் 3 நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு சமவெளி பகுதிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். மலைப்பகுதிகளுக்கு நீர் பாசனம் அதிகமாக தேவைப்படாது.

உரங்கள்

நட்ட 3 முதல் 4 மாதங்கள் கழித்து கொடிகள் பூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது குழி ஒன்றுக்கு 250 கிராம் யூரியா இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.

ஒவ்வொரு முறை அறுவடை முடிந்து கொடியினை அறுத்துவிடும் போதும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 200 கிராம் இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

முளைத்து வெளிவரும் கொடிகளைக் கயிறுடன் இணைத்துக் கட்டி, கயிற்றை 6 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள பந்தலில் கட்டி கொடிகளைப் பந்தலில் விட்டு படரச் செய்யவேண்டும். குழிகளின் இடைப்பகுதிகளில் களைக்கொத்து கொண்டு களைகளை அகற்றவேண்டும்.

அறுவடை முடிந்தவுடன் தரையில் இருந்து 60 செ.மீ உயரத்தில் கொடியினை அறுத்துவிடவேண்டும். அப்போது தான் பக்கக் கிளைகள் குழிகளில் உருவாகி பந்தலில் படரத் தொடங்கும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்தபின் இந்தச் சுழற்சியினை மேற்க்கொண்டால் 4 முதல் 5 ஆண்டுகள் வரை கொடியினை நன்றாக காய்க்கும் திறனில் வைத்துக்கொள்ளலாம். ஜனவரி மாதம் கவாத்து செய்தால் மீண்டும் ஜீலை மாதத்தில் அறுவடைக்கு தயாராகி டிசம்பர் மாதம் வரையிலும் காய்கள் கிடைக்கும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

மாவுப்பூச்சி மற்றும் அசுவினிப்பூச்சிகளை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

பழ ஈக்கள்

பழ ஈக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

நூற்புழு

வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் அதிகமாக உள்ள பகுதிகளில் பியூராடன் குருணை மருந்தை குழிகளைச் சுற்றி இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

விதைத்த 5-6 மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். காய்களை சாதாரண வெப்பநிலையில் 2 முதல் 4 வாரங்கள் வரையில் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்கலாம்.

மகசூல்

நன்கு வளர்ந்த ஒரு கொடியிலிருந்து ஒரு வருடத்திற்கு சுமார் 25 முதல் 30 கிலோ காய்கள் கிடைக்கும்.

பயன்கள்
  • தினசரி இக்காயை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சீக்கிரமே உடல் கொழுப்பு குறைந்து, சரியான வடிவத்துக்குத் திரும்பும்.
  • ரத்தசோகைக்குக் காரணமான இரும்புச்சத்துக் குறைபாடு மற்றும் விட்டமின் பி2 குறைபாடு இரண்டையும் ஈடுகட்டி, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் ஹீமோகுளோபின் அளவையும் கூட்டும் சக்தி கொண்டது.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • இதில் அதிக அளவு வைட்டமின் சி, ஃபோலேட், தயாமின், ரிபோஃப்ளோவின் உள்ளன. இதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், ரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • கர்ப்பிணிகள் இக்காயை முறையாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் விட்டமின் பி9 சத்துக் குறைபாடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

1 Reviews

fircuiche
1

cialis and methamphetamine interaction

1 illustrates some characteristics of cancer cells non prescription cialis online pharmacy

Write a Review

Read Previous

குடைமிளகாய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Read Next

பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *